கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் ‘டூவண்டி 20 கிழக்கம்பலம்’ என்ற அமைப்பு சார்பில் ஏழைகளுக்கு 300 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டின் சாவிகளை ஏழை மக்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் கமல்ஹாசன் கூறியதாவது:–
‘‘தற்போது இந்தியன்–2 படத்தில் நடித்து வருகிறேன். எனது திரையுலக பயணத்தில் இது கடைசி படமாக இருக்கும். இதன் படப்பிடிப்பு வருகிற 14–ந் தேதி தொடங்குகிறது. இந்தியன்–2 படப்பிடிப்பு முடிந்ததும் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவேன். நான் சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும்.
தேர்தலில் போட்டி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். மதசார்பற்ற கட்சிகளுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறேன். மதம், சாதி மற்றும் பணத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபடுவேன்.
பணம் சம்பாதிக்க அரசியலும், அதிகாரமும் பயன்படுத்தப்படுகிறது. பணம் மட்டுமே சில அரசியல்வாதிகளின் இலக்காக இருக்கிறது. ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்கு நல்லது செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது மக்களுக்கு நல்லது செய்பவர்கள் இல்லாத நிலைமை இருக்கிறது.
அரசியல் மாற்றம்
அரசியலில் மாற்றம் வந்துகொண்டு இருக்கிறது. மக்களுக்கு தேவையானதை செய்ய அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். ஆனால் செய்ய முடியாததையே அவர்கள் சொல்லி வருகிறார்கள். வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதுதான் அரசியல் கட்சிகளின் நோக்கமாக இருக்கும். மதசார்பற்ற கட்சி மாநிலத்தில் ஆட்சி, அதிகாரத்துக்கு வரவேண்டும். மாநில மக்கள் சுதந்திரமாக வாழவும் உறுதி செய்ய வேண்டும். கேரளாவை எனது சொந்த வீடு போல் கருதுகிறேன். இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தமிழகத்திலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் தமிழக மக்கள் நலனுக்காக உண்மையாக பாடுபடும்.’’
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.