எதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் யுன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். இந்த பேச்சு வார்த்தையின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர். இதையொட்டி ஒரு உடன்பாடும் செய்து கொண்டனர். ஆனாலும் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் யுன், டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுத்து, முயற்சி மேற்கொண்டார். அதை டிரம்ப் ஏற்றார்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை ஆற்றிய டிரம்ப், வியட்நாமில் 27, 28-ந்தேதிகளில் கிம் ஜாங் யுன்னை சந்தித்து பேசுகிறேன் என அறிவித்தார்.
இந்த நிலையில், டிரம்ப், கிம் சந்தித்துப் பேசும் 2-வது உச்சி மாநாடு வியட்நாமின் தலைநகரமான ஹனோய் நகரில் நடைபெறும் என டிரம்ப் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர், “வடகொரிய தலைவர் கிம்ஜாங் யுன்னை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன். இது அமைதிக்கான நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.