விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது: நேற்று(பிப்.,27) பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானமான எப் – 16 விமானங்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி 7 கி.மீ., தூரம் நுழைந்தன. இந்தியாவில் 4 இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது.
பாகிஸ்தான் விமானங்கள், இந்திய பகுதிக்குள் நுழைந்ததை பார்த்ததும், அங்கிருந்த நமது போர் விமானமான மிக் 21 விமானங்கள் உடனடியாக விரட்ட துவங்கின. இதனையடுத்து எப் – 16 விமானங்கள் பாகிஸ்தானுக்கு திரும்ப துவங்கின. இருப்பினும், அவற்றை, இந்திய போர் விமானங்கள் விரட்டின. அபிநந்தன் சென்ற மிக்- 21 போர் விமானம், எப் – 16 விமானங்களுக்கு இடையே சிக்கி கொண்டது.
அவரது விமானம் தாக்கப்பட்டது. நொறுங்கி விழுவதற்கு முன்னர், அபிநந்தன், ஆர் 73 ஏவுகணை மூலம் எப் – 16 விமானத்தை தாக்கினார். பழைய மிக் போர் விமானத்திலிருந்து, அதிநவீன போர் விமானமான எப் -16 விமானத்தை தாக்கியது அரிதிலும் அரிதான சம்பவமாக கருதப்படுகிறது.
பின் தனது விமானத்திலிருந்து குதித்த அபிநந்தன், காற்றின் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார். பாகிஸ்தான் விமானியும், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.