கோவை, சின்னத்தடாகம் பகுதிகளில், ஜன., 25ல், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானையான, சின்னத்தம்பி, 31ம் தேதி இரவு அங்கிருந்து கிளம்பி, பொள்ளாச்சி, உடுமலை என பயணம் செய்து. கண்ணாடிபுத்துாரில் ஒரு வாரமாக, கரும்புக்காட்டிற்குள் பதுங்கியிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், பத்திரமாக பிடித்து, முகாமில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ‘சின்னதம்பி -2’ ஆப்பரேஷனை வனத்துறையினர் துவக்கினர். காலை, 7:50க்கு, சின்னத்தம்பிக்கு, மூன்று திசைகளிலிருந்தும், துப்பாக்கி மூலம், மயக்க மருந்து செலுத்த முயற்சி நடந்தது. ஒன்று மட்டும் காலில் பட்டது; மற்றொரு கரும்பு காட்டிற்குள் புகுந்தது. அங்கிருந்தும் முடுக்க முயற்சித்த போது, வெளியில் வர மறுத்து, காலை, 9:30க்கு, வலது கால் தொடையில், நான்காவது முயற்சியில் சரியாக மயக்க ஊசியை செலுத்தினர்.
பிளிறல் சத்தத்துடன், மீண்டும் கரும்புக்காட்டிற்குள் சென்று, ஒரு மணி நேரத்தில், அரை மயக்க நிலைக்கு சென்றது. அதன் பின் உள்ளே சென்று, கும்கிகள் உதவியுடன், சின்னத்தம்பியின் கழுத்து, கால்கள் கயிறு மூலம் கட்டப்பட்டது. பகல், 2:00 மணிக்கு, கும்கிகள் உதவியுடன், லாரியில் ஏற்றும் பணி துவங்கியது.
இரு கும்கிகளும், சின்னத்தம்பியை உள்ளே தள்ளின. அரை மணி நேர போராட்டத்திற்குப்பின், லாரிக்குள் ஏற்றப்பட்டது, தொடர்ந்து, இரு புறமும் லாரிகளில் இரு கும்கிகள் ஏற்றப்பட்டு, 3:30 மணிக்கு சின்னத்தம்பி கிளம்பியது.